மேற்குவங்கத்தில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - வானதி சீனிவாசன் ...
மம்தா பானர்ஜி கட்சியினரின் அராஜகத்தால் அச்சத்தில் உறைந்து போயிருக்கும் மேற்குவங்க மக்கள்
ஏப்ரல் 13-ம் தேதி புதன்கிழமை நான் சட்டப்பேரவையில் இருக்கும்போது, பா.ஜ.க. தேசிய தலைமை அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஏப்ரல் 4-ம் தேதி, மேற்குவங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்காலி கிராமத்தில், 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இது குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்த, பா.ஜ.க. தேசியத் தலைவர் திரு. ஜெ.பி.நட்டா 5 பேர் கொண்ட குழு அமைத்திருப்பதாகவும், அதில் நானும் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த குழுவில் தேசிய துணைத் தலைவர் திருமதி ரேகா வர்மா, உத்தரப்பிரதேச அமைச்சர் திருமதி பேபி ராணி மவுரியா, தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் திருமதி குஷ்பு சுந்தர், மேற்குவங்க எம்.எல்.ஏ. ஸ்ரீரூபா மித்ரா சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஏப்ரல் 14-ம் தேதி மாலை, சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்றுவிட்டு, நானும், குஷ்பு சுந்தரும் விமானம் மூலம் நள்ளிரவில் கொல்கத்தா வந்து சேர்ந்தோம். விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் சுகுந்தா மஜூம்தாரை சந்தித்துப் பேசினோம். அவரும் அப்போதுதான், டெல்லியில் இருந்து வந்திருந்தார். 2021 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டவர். 40 வயது இளைஞர். துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்.
விமான நிலையத்தில் 5 பேரின் குழுவில் ஒருவரும், மேற்குவங்க எம்.எல்.ஏ.வுமான ஸ்ரீரூபா மித்ரா மற்றும் மகளிரணி நிர்வாகிகள் எங்களை வரவேற்றனர். ஏப்ரல் 15 காலை 7மணிக்கு புறப்பட்டு, நாடியா மாவட்டத்திற்கு காரில் புறப்பட்டோம். புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு வருவதால் பயணம் கடினமாக இருந்தது. நான்கரை மணி நேர பயணத்தில், ஹன்ஸ்காலி கிராமத்தை வந்தடைந்தோம். சிறிய கிராமம். ஓலை குடிசை. நாடியா மாவட்டத்தில் பா.ஜ.கவுக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜ.வுக்கு செல்வாக்கு உள்ள மாவட்டம்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட 14 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்றோம். சிறுமியின் பெற்றோருக்கு மூன்று குழந்தைகள். இவர் இளையவள். அருகில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்து தலைவர் மகனின் பிறந்த நாளுக்காக, அந்த சிறுமியை அழைத்து சென்றிருக்கிறார்கள். அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அந்த சிறுமியை தூக்கி வந்து வீட்டில் வைத்துள்ளனர். அப்போது சிறுமிக்கு ரத்தப்போக்கு இருந்ததை பெற்றோர் கவனித்துள்ளனர். வீட்டில் உள்ளவர்களை மிரட்டி, சிறுமியை, இடுகாட்டில் எரித்து, தடயங்களை அழித்துள்ளனர்.
ஏழை பெற்றோர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மறுநாள், போலீஸ் உதவி மையத்திற்கு யாரோ தகவல் கொடுக்க, இந்த கொடூரம் வெளி உலகிற்கு தெரிய வந்தது. அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுக்க பிரச்சினை பெரிதாகியுள்ளது. கொல்கத்தா உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து, வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்துள்ளது. இந்த ஓராண்டில் மட்டும், ஏழு வழக்குகளை, உயர் நீதிமன்றம், சி.பி.ஐ. வசம் ஒப்படைத்துள்ளது. இதன் வாயிலாக, மேற்கு வங்கத்தில் காவல் துறையினர் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஹன்ஸ்காலி கிராமத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், அருகில் வசிப்பவர்களை சந்தித்து பேசினோம். பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, உறுதுணையாக இருப்போம் என உறுதி அளித்தோம். சிறுமியை எரித்த இடுகாட்டிற்கும் சென்று பார்வையிட்டோம்.
இறுதியாக பத்திரிகையாளர்களையும் சந்தித்தோம். நிர்பயா வழக்கில் உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் இடம்பெற்றவர் ஸ்ரீரூபா மித்ரா. பா.ஜ.க. மகளிரணி தேசிய செயற்குழு உறுப்பினரான அவர், சில மாதங்களுக்கு முன்பு, ஒடிசா மாநிலத்தில் இதுபோன்ற சம்பவத்திற்காக அமைக்கப்பட்ட குழுவிலும் என்னுடன் இடம்பெற்றிருந்தவர்.
"மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமது கட்சியினர் செய்யும் அனைத்து அட்டூழியங்கள், கொடூரங்களுக்கும் துணைபோகிறார் என்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
இதுபற்றி பா.ஜ.க. கேள்வி எழுப்பினால், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லையா? என எதிர் கேள்வி எழுப்புகின்றனர். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, எந்த பா.ஜ.க. முதல்வர்களும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக நிற்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக எப்போதும் பா.ஜ. இருக்கும்" என, பத்திரிகையாளர்களிடம் நான் தெரிவித்தேன்.
பின்னர் பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து விட்டு, சென்னை திரும்பினேன். ஆனாலும், மனம் முழுக்க மேற்குவங்க நினைவுகள்தான். அங்கு பெண் ஒருவர் முதல்வராக இருக்கிறார். ஆனால், காதல் விவகாரத்தில் இது நடந்திருப்பதாக, குற்றவாளிக்கு ஆதரவாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பதை, அவரது கட்சியினரே ஏற்கவில்லை.
அசாமில் இதுபோன்றதொரு சம்பவம் நடந்தபோது, முதல்வர் ஹிமந்தபிஸ்வா சர்மா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, கடும் நடவடிக்கையும் எடுத்தார். ஆனால், 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், பா.ஜ.க. அரசியல் செய்வதாக அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார் மம்தா பானர்ஜி. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் அவர் சந்திக்கவில்லை.
ஹன்ஸ்காலி கிராமத்தில் அந்த சிறுமியின் பெற்றோரும், இடுகாட்டை பராமரிப்பவரும் பேசவே பயப்படுகின்றனர். ஆளும் கட்சியின் அராஜகத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்து போயியுள்ளனர். இப்படி ஆதரவற்றவர்களுக்காக, குரலற்றவர்களுக்கு தொடர்ந்து உழைக்க வேண்டும். அவர்களுக்காக உரத்த குரல் கொடுக்க வேண்டும் என்ற உந்துதலை இந்தப் பயணம் எனக்கு உணர்த்தியது.



Comments
Post a Comment