தேச நலனுக்காக இறுதி மூச்சுவரை உழைத்த டாக்டர் ஹெட்கேவார்

டாக்டர் ஹெட்கேவார் மறைவதற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடுத்த தலைவராக குருஜி கோல்வால்கர்  அவர்கள் இருக்கவேண்டும் என கடிதம் எழுதி வைத்திருந்தார்...



தேச நலனுக்காக இறுதி மூச்சுவரை உழைத்த டாக்டர் ஹெட்கேவார்

இன்று (யுகாதி) ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவர் அவர்களின் 133-வது பிறந்த தினம். 1889 ஏப்ரல் 1-ம் தேதி யுகாதி நாளில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பிறந்தார் டாக்டர் ஹெட்கேவார்.  இன்று 'கொரோனா போல அன்றைய, காலகட்டத்தில் ஆட்டிப்படைத்த 'பிளேக்' நோய்க்கு தனது தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தார். வறுமையான சூழ்நிலையிலும், கொல்கத்தாவில் மருத்துவம் படிக்கும் அளவுக்கு படிப்பில் சிறந்து விளங்கினார். 

கொல்கத்தாவில் மருத்துவம் படிக்கும் போதே நாட்டின் விடுதலைக்காக இயங்கிய, புரட்சிகர இயக்கங்களில் தீவிரமாக செயல்பட்டார். அதனால், படிப்பை முடித்ததும் டாக்டர் தொழிலில் ஈடுபடாமல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து, விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தார். 1920-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தொண்டர் படையின் துணைத் தலைவராக அவர் பணியாற்றினார். 

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதா? ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் யாராவது விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்களா? என்ற கேள்வி என்று திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், இடதுசாரிகளும் விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு எந்தப் பங்கும் இல்லை என்று ஒரு பொய்யை திரும்பதிரும்ப சொல்லி வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பிறந்ததே விடுதலைப் போராட்டத்தில்தான்.


குடும்பத்தைக் காக்க டாக்டர் பணிக்கு சென்றே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தும், சொந்த வாழ்க்கையைத் துறந்து, காங்கிரசில் இணைந்து, விடுதலைக்காகப் போராடியவர் டாக்டர் ஹெட்கேவார். காங்கிரசில் இருந்தபோது ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்ததால் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்தபோது டாக்டர் ஹெட்கேவாரின் மனதில் பல்வேறு கேள்விகள் எழுந்தன. இத்தனை கோடி மக்கள் கொண்ட, இவ்வளவு பெரிய நாட்டை, ஒரு சிறு நாட்டிலிருந்து வியாபாரம் செய்ய வந்த, சிறு கூட்டம் எப்படி ஆட்சி செய்கிறது? அதற்கு என்ன காரணம்? என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினார். ஜாதி, மொழி என பல வகைகளில் மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். தாங்கள் யார்? இந்த நாடு எத்தகைய சிறப்பு மிக்கது என்பதை மக்கள் உணரவில்லை. இதை மக்களுக்கு உணர்த்தாமல், விடுதலை கிடைத்தாலும் பலனில்லை. பிரிட்டிஷாருக்கு பதில், நாளை வேறொரு நாட்டவர் நம்மை அடிமைப்படுத்தி ஆள நேரிடும். எனவே தேசிய நலனை முன்னிறுத்தி, மக்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு இயக்கம் தொடங்க வேண்டும் என முடிவு செய்தார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் 1925 விஜயதசமி நாளில் அவர் தொடங்கிய இயக்கம்தான், இன்று உலகமே வியக்கும் ஆர்.எஸ்.எஸ். 

இயக்கத்தை தொடங்கும்போது டாக்டர் ஹெட்கேவாருக்கு வயது 35. 1950-ல் அதாவது, தனது 50-வது வயதில் அவர் காலமானார். ஆர்.எஸ்.எஸ்ஸை தொடங்கி பிறகு 15 ஆண்டுகள் மட்டுமே அவரால் உயிர் வாழ முடிந்தது. அந்த 15 ஆண்டுகளுக்குள் அவர் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸை கொண்டு சேர்த்து விட்டார். அதற்கு அவர் ஒரு யுக்தியைக் கையாண்டார். பள்ளியில் படிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, கல்லூரிப் படிப்புக்காக நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பினார்.  அந்த மாணவர்களின் நோக்கம், கல்லூரியில் படிப்பது மட்டுமல்ல, அங்கு ஆர்.எஸ்.எஸின் கிளையான 'ஷாகா'வை தொடங்குவது தான். அப்படி அவர் அனுப்பிய மாணவர்கள் யாரும் சோடை போகவில்லை. அத்தனை பேரும் சாதித்தார்கள். அவர்கள் இட்ட அடித்தளத்தில் தான் இன்று பா.ஜ.க. எழுந்து நிற்கிறது நாட்டையே ஆள்கிறது. அப்படி தமிழகத்துக்கு அனுப்பப்பட்டவர் திரு. தாதாராவ் பரமார்த். மராத்தியும் கொஞ்சம் இந்தியும் தெரிந்த அவர், தமிழகத்தில் பல ஆண்டுகள் தங்கி ஆர்.எஸ்.எஸ்.ஸை தொடங்கினார்.


உலகம் எத்தனையோ தலைவர்களை கண்டுள்ளது. அவர்களில் வெகு சிலர் தான் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்கள். அப்படி வரலாற்றில் நிலைத்து நிற்கும், என்றும் நிலைத்து நிற்கப் போகும் தலைவர்தான் டாக்டர் ஹெட்கேவார். இன்று டாக்டர் ஹெட்கேவாரை அறியாதவர்கள் இருக்கலாம். ஆனால் அவர் தொடங்கிய இயக்கத்தை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஒரு தலைவரின் சிறப்பு என்பது அவரது பணிகள் மட்டுமல்ல. அவருக்கு பிறகும், அவர் தொடங்கிய பணிகள் தொய்வின்றி நடக்க வேண்டும். அதற்கு சரியான தலைவர்களை அடையாளம் காண வேண்டும். அப்படி அடையாளம் கண்டவர்கள் தான் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்கள் டாக்டர் ஹெட்கேவார் மறைவதற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடுத்த தலைவராக குருஜி கோல்வால்கர்  அவர்கள் இருக்கவேண்டும் என கடிதம் எழுதி வைத்திருந்தார். பலருக்கும் அது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. 33 வயது இளைஞரான கோல்வால்கரால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வழிநடத்த முடியும்? இயக்கம் இத்தோடு முடிந்து விட்டது என்று பலரும் கவலை கொண்டனர். எதிரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனால் அந்த கோல்வால்கர் தான்_ தேசப்பிரிவினை, மகாத்மா காந்தி படுகொலை என்ற நெருப்பாற்றை நீந்தி ஆர்.எஸ்.எஸ்ஸை இந்தியாவின் மிகப் பெரிய இயக்கமாக வளர்த்தெடுத்தார். டாக்டர் ஹெட்கேவாரின் தேர்வு எப்படிப்பட்டது என்பதை வரலாறு நிரூபித்தது. டாக்டர் ஹெட்கேவார் 1950-ல் சரியான தலைவரை தேர்வு செய்திருக்காவிட்டால், இந்தியாவின் வரலாறு வேறு விதமாக இருந்திருக்கும். இன்று பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதற்கு டாக்டர் ஹெட்கேவார் 1925 நாக்பூரில் போட்ட விதைதான் காரணம். அவர் உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ். இயக்கமும். அவர் கண்டுபிடித்த 'ஷாகா' என்ற அற்புதமும் நிகழாமல் இருந்திருந்தால் இந்தியா இப்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போல மாறியிருக்கும். தேச நலன் ஒன்றையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டு இறுதி மூச்சு வரை வாழ்ந்த டாக்டர் ஹெட்கேவார் . அவர் காட்டிய பாதையில் பயணித்து, தேச நலனுக்காக என்றும் உழைக்க உறுதியேற்போம்.

Comments