பா.ஜ.க. தேசியத் தலைமை அலுவலகத்தில் 13 வெளிநாட்டு தூதர்கள் பங்கேற்ற இனிய நிகழ்வு....
பா.ஜ.க. தேசியத் தலைவர் திரு. ஜெ.பி.நட்டாவின் பாராட்டு பெரும் கெளரவம்...
ஏப்ரல் 6-ம் தேதி பா.ஜ.க. தொடங்கப்பட்டதன் 42-வது ஆண்டு விழா என்பதால், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசிய தலைமை அலுவலகத்தில், தேசியத் தலைவர் திரு. ஜெ.பி.நட்டா அவர்கள் கொடியேற்றினார். அந்நிகழ்வில் பங்கேற்றேன். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் உரையை தலைவர்களோடு அமர்ந்து கேட்டோம்.
பிறகு, மத்திய வேளாண் துறை அமைச்சரை சந்தித்து, கோவையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, தென்னை வளர்ச்சி வாரியத்தின் அலுவலக திறப்பு விழாவுக்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுத்தேன். பெண்களுக்கென தனியாக உழவர் உற்பத்தி மையங்களை தொடங்க பா.ஜ.க. மகளிரணி சார்பில் முயற்சித்து வருகிறோம். அதற்கு வேளாண் அமைச்சகம் உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன்.
மாலை 3 மணிக்கு மீண்டும் கட்சியின் தேசியத் தலைமை அலுவலகத்திற்கு சென்றேன். பா.ஜ.க. அமைப்பு தினத்தையொட்டி, பா.ஜ.க.வை அறிந்து கொள்ளுங்கள் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஹங்கேரி, நார்வே, போலந்து, ருமேனியா, சுலோவாக்கியா உள்ளிட்ட 13 நாடுகளின் தூதர்களுக்கு, பா.ஜ.க. கட்சியைப் பற்றியும், ஆட்சியைப் பற்றியும் எடுத்துச் சொல்வது தான் அந்நிகழ்ச்சியின் நோக்கம்.
பா.ஜ.க. வெளிநாடுகள் பிரிவின் தலைவர் திரு. விஜய் சவுதேவாலாவும், அவரது குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 'ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆப் பிஜேபி' என்ற அமைப்பும் இதற்கான முன் முயற்சிகளை எடுத்திருந்தது. கொரோனாவால் 2 ஆண்டுகளாக தள்ளி வைக்கப்பட்ட நிகழ்ச்சி நடந்தது.
கட்சி அலுவகத்திற்கு வந்த வெளிநாட்டு தூதர்களை வரவேற்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. நானும் நாகலாந்து எம்.எல்.ஏ.வும், தேசிய செய்தித் தொடர்பாளருமான திரு. கிக்கான் அவர்களும், வெளிநாட்டு தூதர்களை வரவேற்று, அவர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றோம்.
முதலில் பா.ஜ.க.வின் வரலாற்றைச் சொல்லும் 25 நிமிடங்கள் ஓடும் குறும்படம் திரையிடப்பட்டது. ஜனசங்க காலம் முக்கிய பா.ஜ.க. தலைவர்களின் வீடியோ பதிவுகள் என்று அருமையாக தயாரிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, சாதாரண மக்களின் வாழ்வில் மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பா.ஜ.க. அரசு எப்படியெல்லாம் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்து விவரித்தார். அமைப்பு ரீதியாக பா.ஜ.க. எப்படி செயல்படுகிறது, உட்கட்சி ஜனநாயகத்திற்கு எப்படி முக்கியத்தும் கொடுக்கிறோம் என்பது பற்றியும் ஜெ.பி.நட்டா பேசினார்.
அதன்பிறகு தூதர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஜெ.பி.நட்டா பதிலளித்தார். சிறுபான்மை மக்களை பா.ஜ.க. அரசு எப்படி பாதுகாக்கிறது என்பது பற்றி பிரான்ஸ் தூதர் கேள்வி எழுப்பினார். வேட்பாளர்களை பா.ஜ.க. எப்படி தேர்வு செய்கிறது? பா.ஜ.க.வில் உள்கட்சி ஜனநாயகம் எப்படி உள்ளது? கட்சியிலும், ஆட்சியிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துகிறீர்கள்? ஊழல் ஒழிப்பில் டிஜிட்டல் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு பயன்படுகிறது? என பல்வேறு கேள்விகளை கேட்டார்கள். அனைத்திற்கும் ஜெ.பி.நட்டா அவர்கள் தெளிவாக பதில் அளித்தார்.
பா.ஜ.க. கட்சியிலும், ஆட்சியிலும் பெணகளுக்கான அங்கீகாரத்தை எந்த அளவுக்கு அளிக்கிறீர்கள் என, ருமேனியா நாட்டின் பெண் தூதர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜெ.பி.நட்டா, “கட்சியிலும், ஆட்சியிலும் பெண்கள், இளைஞர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில் நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பிரதமர் திரு. நரேந்திர மோடியும் அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரும்போது எதிர்ப்புகளை சந்திக்கிறோம். ஆனாலும், அதனை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். நியமன பதவிகளில் குறைந்தது 30 சதவீதம் பெண்கள் இருப்பதை உறுதி செய்ய முயற்சித்து வருகிறோம். தேர்தல் அரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கும்போது, சில நேரங்களில் வெற்றிவாய்ப்பு கடினமாக இருக்கிறது. ஆனாலும், அந்த சவாலை சந்திக்க நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். இந்த கூட்டத்தில் நம்மோடு கலந்து கொண்டிருக்கும் பா.ஜ.க. மகளிரணி தேசியத் தவைவர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள், தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று, வெற்றிகரமாக அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். பா.ஜ.க. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது, அங்கீகாரம் கொடுக்கிறது என்பதற்கு திருமதி வானதியே சிறந்த உதாரணம். தமிழகத்தில், அடிப்படை நிலையில் இருக்கும் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றிருக்கிறார்" என்று பதிலளித்தார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு அளித்ததோடு, வெளிநாட்டு தூதர்களிடம் மிகப்பெருமையாக அறிமுகப்படுத்தியது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா அவர்களுக்கு பெருமித உணர்வோடு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.
அடித்தட்டு மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பா.ஜ.க. எப்படி முனைப்பு காட்டுகிறது என்பதற்கு உதாரணமாக என்னைப்போல நூற்றுக்கணக்கான பெண்கள் இருக்கிறார்கள். ஆனாலும், மகளிரணி தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நான் எத்தகைய பின்னணியில் இருந்து வந்திருக்கிறேன் என்பது, தூதர்களுக்கு எழுத்து வடிவில் கொடுக்கப்பட்டிருந்தாலும், தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தனது உரையிலும் குறிப்பிட்டதை பெரும் கெளரவமாக கருதுகிறேன்.
லட்சகணக்கான நிர்வாகிகளின் தியாகத்தாலும், கோடிக்கணக்கான தொண்டர்களின் உழைப்பாலும் பா.ஜ.க. என்ற கட்சி, மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்திருக்கிறது. நிகழ்ச்சி முடிந்ததும், தேசிய தலைமை அலுவலகத்தை, வெளிநாட்டு தூதர்களுக்கு சுற்றி காண்பித்தோம். பிறகு அவர்களுடன் சிற்றுண்டி சாப்பிட்டோம். நாடாளுமன்றத்தில், ரஷ்யா - உக்ரைன் விவகாரம் பற்றி பேச வேண்டியிருந்ததால், இந்நிகழ்வில் கலந்து வேண்டிய, வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. எஸ்.ஜெய்சங்கரால் வர முடியவில்லை. ஆனாலும், நிகழ்ச்சி முடிந்து, தூதர்களுடன் சிற்றுண்டி சாப்பிடும் நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மிக இனிமையான, மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது.
ரஷ்யா - உக்ரைன் போரால், உக்ரைனில் படித்துவந்த, ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களை தாயகம் கொண்டு வருவதில் போலந்து, ருமேனியா நாடுகளின் தூதர்கள் பெரும் பங்காற்றினர். அவர்களின் உதவிகளை குறிப்பிட்ட தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, அவர்களுக்கு பா.ஜ.க. சார்பில் நன்றி தெரிவித்தார்.



Comments
Post a Comment