நிலத்தடி நீர்வளம் காப்போம்
நிலத்தடி நீர்வளத்தை காக்க வேண்டும் என்பதை இன்றைய உலக தண்ணீர் நாள் (மார்ச் 22) கருத்தாக ஐக்கிய நாடுகள் அவை முன்வைத்துள்ளது.
உலகில் திரவ வடிவில் இருக்கும் நன்னீரில் 99% நிலத்தடி நீராகவே உள்ளது. வீடுகளுக்கான தண்ணீரில் பாதியளவும், விவசாயத் தேவைக்கான நீரில் கால் பங்கும் நிலத்தடி நீரின் மூலமே கிடைக்கிறது. எனவே, நிலத்தடி நீரை காக்காமல் பூவுலகில் மனித வாழ்வை காப்பாற்ற முடியாது என்பதே உண்மை ஆகும்.
உலக அளவில் மிக அதிக அளவில் நிலத்தடி நீரை பயன்படுத்தும் நாடு இந்தியா. இந்தியாவில் எடுக்கப்படும் நிலத்தடி நீரின் அளவில் பாதியளவுக் கூட சீனாவிலும், அமெரிக்காவிலும் எடுக்கப்படவில்லை. அவ்வாறே, நிலத்தடி நீர் வளம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
நீர்வள அடிப்படையில் இயற்கையாகவே வஞ்சிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவின் மக்கள் தொகையில் 6 விழுக்காட்டினர் தமிழ்நாட்டில் வசிக்கின்றனர். ஆனால், இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 4 விழுக்காடு மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது. அதைவிட மோசமாக, இந்தியாவின் தண்ணீர் வளத்தில் 2.5 விழுக்காடு மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது. இந்திய மக்களுக்கு கிடைக்கக் கூடிய தனிநபர் சராசரி நீர்வள அளவு 2200 கன மீட்டர். ஆனால் தமிழ்நாட்டில் இது வெறும் 900 கன மீட்டர் மட்டுமே. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நீர்வளம் என்பது கங்கை நதியில் சில மணி நேரம் ஓடும் வெள்ளத்தை விடவும், கோதாவரி ஆற்றில் சில நாட்களுக்கு ஓடும் வெள்ள நீரைவிடவும் குறைவானதாகும்!
தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்வளம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற கழிவுகள், தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீர்வளம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மிதமிஞ்சிய நீர்வளச் சுரண்டலால் நிலத்தடி நீர் மட்டம் கீழே செல்கிறது. கடலோர மாவட்டங்களில் நிலத்தடி நீர் உப்பாக மாறி மக்கள் வாழ்வை கடுமையாக பாதித்துள்ளது.
தமிழ்நாட்டில் நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டிய போர்க்கால சூழல் உள்ளது. அதற்காக அனைவரும் குரல்கொடுக்க, செயல்பட வேண்டும்.
Comments
Post a Comment