'தை முதல் நாளே தமிழனுக்கு புத்தாண்டு' என்பது தமிழ் மக்கள் ஓரினமாக நின்று, தமது அடையாளத்தை காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு முதன்மைக் குறியீடு ஆகும்.
இது எந்தவொரு நம்பிக்கைக்கும் எதிரானது இல்லை. அதற்கான விளக்கத்தைக் காண்போம்:
1. "இந்தியாவின் நாட்காட்டி"
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களிடம் இன்றைய தேதி என்னவென்று கேட்டால், 14.01.2022 என்றே சொல்லக் கூடும்.
ஆனால், இந்தியாவின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியின் படி இன்றைய தேதி 24.10.1943 ஆகும். அதாவது, இன்றைய நாள் - சாலிவாகன ஆண்டு 1943, பௌசா மாதம், 24 ஆம் நாள் ஆகும்.
சாதவாகன மன்னன் என்பவன், உஜ்ஜயினியின் விக்கிரமாதித்தனுக்கு எதிராக போர் தொடுத்து கி.பி. 78 ஆம் ஆண்டில் வெற்றிபெற்றதை குறிக்க இந்த நாட்காட்டி பயன்படுத்தப்படுகிறது. இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அரசு உத்தரவுகளில் இதுதான் இடம் பெற்றுள்ளது.
2. "தமிழ்நாட்டின் நாட்காட்டி"
தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியின் படி இன்றைய தேதி 1.1.2053 ஆகும். அதாவது, இன்றைய நாள் - திருவள்ளுவர் ஆண்டு 2053, தை மாதம், 1 ஆம் நாள் ஆகும்.
திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் கி.மு. 32 ஆம் ஆண்டில் பிறந்தார் என்பதை குறிக்க இந்த நாட்காட்டி பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அரசு உத்தரவுகளில் இதுதான் இடம் பெற்றுள்ளது.
இந்திய மக்கள் பலவகை நாட்காட்டிகள் பயன்படுத்தினாலும், இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக பின்பற்றும் சாலிவாகன நாட்காட்டிக்கு எவரும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. எனவே, தமிழக மக்கள் பலவகை நாட்காட்டிகளை பயன்படுத்தினாலும் - தமிழ்நாட்டின் அதிகரப்பூர்வமான திருவள்ளுவர் ஆண்டை எதிர்க்கும் தேவையே இல்லை.
"பலவகை நாட்காட்டிகள்!"
உலகிலோ, இந்தியாவிலோ, தமிழ்நாட்டிலோ ஒற்றை நாட்காட்டி பின்பற்றப்படவில்லை. ஒவ்வொரு நம்பிக்கை, பண்பாட்டுக்கு ஏற்ப ஒரே நேரத்தில் பலவிதமான நாட்காட்டிகளை மக்கள் பின்பற்றுகிறார்கள். இதில் பெரிய குழப்பம் எதுவும் இல்லை.
ஐக்கிய நாடுகள் அவையாலும், உலகின் அதிக நாடுகளால் ஏற்கப்பட்ட நாட்காட்டி, 1582-ல் கத்தோலிக்க திருத்தந்தை 13 ஆம் கிரிகோரி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டி ஆகும். இது கிமு 46 ஆம் ஆண்டின் ஜூலியன் நாட்காட்டியின் திருத்தப்பட்ட வடிவம் ஆகும்.
பொதுமக்களும் கிறிஸ்தவர்களும் கிரிகோரி நாட்காட்டியை கிறிஸ்துவுக்கு முன்பு (கி.மு), கிறிஸ்துவுக்கு பின்பு (கி.பி) என்பதாக பயன்படுத்துகின்றனர். தற்காலத்தில் மதசார்பற்ற வழியில் இதனை பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்கு பின் (பொ.மு, பொ.பி) என்பதாக பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துள்ளது.
உலகமெங்கும் முஸ்லிம்கள் ஹிஜ்ரி ஆண்டு என்பதை பின்பற்றுகின்றனர். ஆனால், இது முகமது நபி அவர்கள் வகுத்த ஆண்டு முறை அல்ல. முகமது நபி மக்காவைவிட்டு மதீனாவுக்கு சென்றதை குறிக்கும் வகையில், பிற்காலத்தில் உமர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி ஆண்டு என்பதை ஏற்படுத்தினார்கள்.
தென் இந்தியாவிலும் பலவகை நாட்காட்டிகள் உள்ளன. தெலுங்கு மற்றும் கன்னட மொழிபேசும் மக்கள் உகாதி எனும் ஆண்டு பிறப்பை கொண்டாடுகின்றனர். பிரம்மன் உலகத்தை படைத்ததாக நம்பப்படும் நாளில் இந்த உகாதி தொடங்குகிறது.
கேரளவில் கொல்லம் ஆண்டு என்பதை பயன்படுத்துகின்றனர். பழைய கொல்லம் கடல் கோளால் அழிந்து, புதிய கொல்லம் 825 ஆம் ஆண்டில் அமைந்ததை குறிக்கும் ஆண்டாக இது நம்பப்படுகிறது. கொல்லம் ஆண்டு ஆவணி மாதத்தில் தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் இந்து பஞ்சாங்கம் சித்திரையை தொடக்க நாளாக குறிக்கிறது.
(சித்திரையில் தொடங்கும் வருடம் சுழற்சி முறையிலானது. 60 ஆண்டுகளில் முடிந்து, மீண்டும் தொடங்கக் கூடியது. ஆனால், திருவள்ளுவர் ஆண்டு தொடர்ச்சியானது. எனவே, ஒன்றுக்கு எதிராக இன்னொன்றை நிறுத்தும் அவசியம் இப்போது இல்லை)
"தை முதல் நாளே தமிழனுக்கு புத்தாண்டு"
'தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' - என்பது பாவேந்தர் பாரதிதாசன் பாடலாகும்.
உலகின் எல்லா நாடுகளிலும், எல்லா சமூகங்களும் தமக்கான தனித்தனி அடையாளங்களை காப்பற்றிக்கொள்வதன் மூலமாகவே, காலம்தோரும் நீடித்திருக்கின்றன. அவ்வாறே, தமிழர் என்கிற அடையாளமும் தமக்கான பண்பாட்டை காப்பாற்றும் போராட்டத்தினை காலம்தோரும் தொடர்ந்து நடத்திவருகிறது. அதில் ஒரு அங்கம்தான் தை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுவதும் ஆகும்.
இந்திய அரசாங்கத்தில் பேரரசின் மொழியான இந்தி திணிக்கப்பட்டு, தமிழ் ஒடுக்கப்படுகிறது. பாரம்பரிய இசையில் தெலுங்கு கோலோச்சி, தமிழ் வீழ்த்தப்படுகிறது. கோவில்களில் சமஸ்கிருதம் அரியணையில் வீற்றிருக்கும் போது, தமிழ் வீதியில் நிறுத்தப்படுகிறது. கல்வியில் ஆங்கிலம் ஆக்கிரமித்து, தமிழ் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறான ஒரு சூழலில் தான் திருவள்ளுவர் ஆண்டு என்பது தமிழர்களின் தேவையாக உள்ளது.
'தை பிறந்தாள் வழி பிறக்கும்', 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்கிற நம்பிக்கைகளும், வீடுகளை புதுப்பிப்பதும், புதுப்பானை, புத்தரிசி, புது நெய் என பொங்கலுக்கான வழிபாட்டு வடிவங்கள் அனைத்தும் புதியதாக இருப்பதும், இந்த நாள் சூரியனை வழிபடும் நாளாக இருப்பதும் - இவை எல்லாமும் புத்தாண்டை குறிப்பனவாகவே உள்ளன.
உலகெங்கும் வாழும் தமிழர்களின் பண்பாட்டு மாதமாக இருப்பதும் தை மாதமே ஆகும். கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தை மாதத்தை தமிழர் பண்பாட்டு மாதமாக கொண்டாடுகின்றன.
"திருவள்ளுவர் ஆண்டு வந்தது எப்படி?"
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1935 -இல் மறைமலை அடிகள் தலைமையில் பல அறிஞர்கள் ஒன்றுகூடி 'தை முதலே தமிழ்ப் புத்தாண்டு' என்றும், 'திருவள்ளுவரின் பிறந்த ஆண்டு கி.மு. 31' என்றும் முடிவு செய்தனர். இதுவே தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியின் பின்னணி ஆகும்.
இக்கூட்டத்தில் மறைமலை அடிகள், திரு.வி. கலியாணசுந்தரனார், கா. சுப்பிரமணிய பிள்ளை, சச்சிதானந்தம் பிள்ளை, நா.மு. வேங்கடசாமி நாட்டார், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம், உ.வே. சாமிநாத ஐயர் என பல தமிழறிஞர்கள் பங்குபெற்றுள்ளனர்.
"திருவள்ளுவர் ஆண்டின் தேவை என்ன?"
உலகின் எல்லா நாகரீகங்களும் மக்களின் நம்பிக்கைகள் மீதுதான் இயங்குகின்றன. எந்தவொரு நாகரீகமும் மாறாத தன்மை கொண்டது அல்ல. ஒவ்வொரு சமூகத்தின் பண்பாடும் ஓடிக்கொண்டிருக்கும் நதிபோல, மக்களின் மூலமாகவே உயிர்த்திருக்கின்றன. ஒரே ஆற்றில் ஒருவர் இரண்டு முறை இறங்க முடியாது என்பார்கள். பண்பாடும் அதுபோலத்தான். சமுதாயங்கள் தேவைக்கேற்ப காலம்தோறும் தமது நம்பிக்கைகளை மெருகேற்றிக் கொள்கின்றன. அதே போன்று தமிழக மக்கள் அனைவரையும் ஒரணியில் அடையாளப்படுத்தும் நோக்கில் திருவள்ளுவர் ஆண்டை தமிழறிஞர்கள் முன்வைத்தனர்.
திருவள்ளுவர் கிமு 31 ஆம் ஆண்டில் தான் பிறந்தாரா? தமிழ்நாட்டில் தை மாதத்துக்கு மட்டும் தான் சிறப்பு இருக்கிறதா? சித்திரைக்கு இல்லையா? வைகாசி மாதத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக நம்பப்படுகிறேதே? -என்பதெல்லாம் நியாயமான கேள்விகள் தான்.
ஆனால், ஒருபக்கம் தனித்தமிழ் இயக்கமும் மறுபக்கம் திராவிட இயக்கமும் ஒரே இலக்கில் உருவான காலத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்கிற வரலாற்று சூழலுடன் இதனை பொருத்திப் பார்க்க வேண்டும்.
தமிழர் பண்பாட்டை காப்பாற்ற வேண்டும். வடமொழி திணிப்பை அகற்ற வேண்டும் என்கிற நோக்குடனும், பழம் தமிழ் இலக்கியங்களின் ஆதாரங்களுடனும் இந்த நாள் உருவாக்கப்பட்டது. இதனை 1972 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டது.
எனவே, தமிழ்நாட்டின் பொதுவான நாட்காட்டியாக கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தப்பட்டாலும், மத அடிப்படையிலும், மொழி அடிப்படையிலும், பஞ்சாங்க அடிப்படையிலும், வேறுபட்ட நாட்காட்டிகள் இருந்தாலும், சித்திரை முதல்நாள் வருஷப்பிறப்பு என்பதாக கொண்டாடப்பட்டாலும் - தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியாக திருவள்ளுவர் ஆண்டும், தை முதல் நாளும் அமைவதே சிறப்பு.
குறிப்பு: கிரிகோரி ஆண்டான 2022 முறைதான் இப்போது தமிழ்நாட்டின் பொதுவான ஆண்டாக உள்ளது. கிரிகோரி ஆண்டு, ஹிஜ்ரி ஆண்டு, கொல்லம் ஆண்டு, உகாதி ஆண்டு என்பனவற்றை கொண்டாடும் எவரும் திருவள்ளுவர் ஆண்டினை எதிர்க்கவில்லை. அதே போன்று, சித்திரையில் பிறக்கும் பஞ்சாங்க ஆண்டினை கொண்டாடுவோரும் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வமான திருவள்ளுவர் ஆண்டினை எதிர்ப்பதற்கான தேவையே இல்லை.
Comments
Post a Comment