புல்லி பாய், சுல்லி டீல்ஸ்: இந்தியாவை எரிக்கப்போகும் வெறுப்பு மனநோய்

'சுல்லி டீல்ஸ்’ எனும் செல்பேசி செயலி (App) மூலமாக ஒரு சமூகத்து பெண்களின் புகைப்படங்களை மாற்றி, தவறான முறையில் சித்தரித்து ஏலம் விடப்படுவதாக 2021 ஜூலை மாதம் புகார் எழுந்தது......... 



"புல்லி பாய், சுல்லி டீல்ஸ்: இந்தியாவை எரிக்கப்போகும் வெறுப்பு மனநோய்!"

----------------
'புல்லி பாய்', 'சுல்லி டீல்ஸ்' - இந்த வார்த்தைகளை நீங்கள் அலட்சியமாக கடந்து போகலாம். ஆனால், இதுதான் இந்திய மக்களின் நல்லிணக்க மனப்பான்மையை தகர்த்து, இனப்படுகொலையில் தள்ளும் ஒரு பேராபத்தின் தொடக்கம் ஆகும்.  இந்தக் கருத்தை நீங்கள் இப்போது நம்பாவிட்டாலும், இன்னும் 5 ஆண்டுகளுக்குள் நம்புவீர்கள்!

'பின்னணி என்ன?'

இந்தியாவின் பல பகுதிகளில் வாழும், நேரடி அறிமுகம் இல்லாத - நல்ல கல்வி, மேம்பட்ட தொழில்நுட்ப அறிவு, அதிக திறமை வாய்ந்த, மிக இளம் வயது இளைஞர்கள் பலர் இணையவழியில் ஒன்று சேர்ந்து - ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றி, அவர்களை ஏலம் விடும் வெறுப்பு செயலியை நடத்தியுள்ளனர்.

'புல்லி பாய்', 'சுல்லி டீல்ஸ்' 

'சுல்லி டீல்ஸ்’ எனும் செல்பேசி செயலி (App) மூலமாக ஒரு சமூகத்து பெண்களின் புகைப்படங்களை மாற்றி, தவறான முறையில் சித்தரித்து ஏலம் விடப்படுவதாக 2021 ஜூலை மாதம் புகார் எழுந்தது. இந்த வழக்கில் அமெரிக்காவின் GitHub நிறுவனத்திடம் குற்றவாளிகளின் தகவல்களை தில்லி காவல்துறையினர் கேட்டபோது, தரமறுத்துவிட்டனர்.



இந்நிலையில் மீண்டும் ''புல்லி பாய்' எனும் வேறொரு செயலி மூலமாக அதே சமூகத்து பெண்களை ஏலம் விடுவதாக 2022 ஜனவரி 1 அன்று சிலர் டிவிட்டர் மூலம் செய்தி பரப்பினர். இந்தக் குற்றத்துக்கு எதிராக டெல்லி மற்றும் மும்பை காவல்துறையில் புகார் செய்தனர். 

'புல்லி பாய்' செயலியுடன் தொடர்புடைய உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு முடித்த மாணவி சுவேதா சிங் (19 வயது), டில்லியில் வேதியியல் படிக்கும் மயங்க் ராவல் (21 வயது), பெங்களுரில் பொறியியல் படிக்கும் விஷால் குமார் ஜா (21 வயது) ஆகியோரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். 

இந்தச் செயலியை உருவாக்கிய நீரஜ் பிஷ்னோய் (21 வயது) கணினி அறிவியல் மாணவரை அசாம் மாநிலத்தில் டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

நீரஜ் பிஷ்னோய் அளித்த தகவலின் அடிப்படையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 'சுல்லி டீல்ஸ்' செயலியை உறுவாக்கிய ஓம்காரேஷ்வர் தாக்கூர் (26 வயது) எனும் கணினி வல்லுநரை மத்திய பிரதேசம் இந்தூரில் தில்லி காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

குற்றவாளிகள் தமது வெறுப்புக் குற்றச் செயலை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

----------------



"நிழல் உலகில் வெறுப்பு குற்றவாளிகள்"

'புல்லி பாய்', 'சுல்லி டீல்ஸ்' செயலிகளை திட்டமிட்டு உருவாக்கி, பரப்பிய இவர்கள் அனைவரும் சாதாரணமான மனிதர்கள் தான். மிக இளம் வயதினர், நல்ல கல்வி கற்றுள்ளனர். மிகவும் நுணுக்கமான தொழில்நுட்ப அறிவை கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இணையத்தின் வழியா ஒன்று கூடி, டிவிட்டர் மூலம் தங்களுக்குள் உரையாடி, கூட்டாக செயலியை உருவாக்கி, அதில் தாம் வெறுக்கும் மதப்பெண்களை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளனர்.

இவர்கள் பல போலி அடையாளங்களை உருவாக்கியுள்ளனர். ஜெனீவாவில் உள்ள CERN ஆய்வகத்தின் மிகவும் ரகசியமான புரோட்டன் மெயிலை பயன்படுத்தியுள்ளனர். VPN மூலம் ஜப்பான், நேப்பாளம் போன்ற வெளிநாடுகளில் இருப்பவர்கள் போன்று காட்டியுள்ளனர்.

தமது மத அடையாளத்தையும் மறைத்து 'கல்சா சீக்கிய படை', 'கல்சா வாரியர்' என்கிற சீக்கியர் அடையாளத்தை பயன்படுத்தி 'புல்லி பாய்' மூலம் வெறுப்பை பரப்பியுள்ளனர். இதன்மூலம் மதவெறுப்பை வெளியிடுபவர்கள் சீக்கியர்கள் தான் என்று நம்பவைத்தனர்,

அதே போன்று 'சுல்லி டீல்ஸ்' செயலியை உருவாக்கியவர் 'ஜாவேத் ஆலம்' என்கிற முஸ்லிம் என்கிற கட்டுக்கதையை பத்திரிகைகள் மூலம் எல்லாம் செய்தியாக வெளியிட செய்தனர் (ஆனால், இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர் ஓம்காரேஷ்வர் தாக்கூர்)

இதில் வியப்பளிக்கும் ஒற்றுமை என்னவென்றால், கைது செய்யப்பட்ட ஒருவர் மீது கூட அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு எந்த சந்தேகமும் ஏழவில்லை. இவர்கள் கைது செய்யப்படும் வரை, இவர்கள் செய்துவந்த குற்றச்செயலை ஒருவரும் அறிந்திருக்கவில்லை.

----------------



"இந்தியாவை எரிக்கப்போகும் வெறுப்பு மனநோய்!"

மதம், இனம், சாதி, அரசியல் நிலைப்பாடு என பல அடையாளங்களுக்காக இந்திய நாட்டின் மக்கள் அடித்துக்கொண்டு சாகும் பேரழிவுக் காலம் 10 ஆண்டுகளில் வரும். அதற்கு முகநூல், டிவிட்டர், வாட்ஸ்ஆப், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் காரணமாக இருக்கும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முகநூல் நிறுவனத்தின் உள்ஆய்வு அறிக்கை தெரிவித்தது.

அந்தக் காலம் வெகு விரைவிலேயே வரும் என்பதை 'புல்லி பாய்', 'சுல்லி டீல்ஸ்' நிகழ்வு உறுதி செய்கிறது.

 

Comments