"தமிழர் வரலாற்றுக்கும் தமிழ் மொழிக்கும் பாடுபட்ட சதாசிவ பண்டாரத்தர் நினைவை போற்ற வேண்டும்"அனைத்து சமுதாயங்களும் முன்னேறினால்; தமிழ்நாடு முன்னேறிவிடும்" - 83 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த கோரிக்கை!
"தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் தான் முழுமையான சமூகநீதியை நிலைநிறுத்த முடியும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்" - என மருத்துவர் அய்யா அவர்கள் 29.12.2021 அன்று பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இதே கோரிக்கையை 83 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பியிருக்கிறார் 'வரலாற்றுப் பேரறிஞர்' தி.வை.சதாசிவப் பண்டாரத்தார். 27.02.1939-ல், கும்பகோணம் தேப்பெருமாள் நல்லூரில் நடந்த 'வன்னியகுல சத்திரிய மாநாட்டின்' வரவேற்பு பேருரையில் 'அனைத்து சமூகங்களுக்கும் உரிமை வேண்டும்' என அவர் முழங்கியிருக்கிறார்.
(இன்று 02.01.2022 அன்னாரது 62 ஆம் நினைவு நாள் ஆகும்.)
---------------
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் பேச்சு கீழே (27.02.1939) :
"ஆண்மை மிக்க அரசர் வழியில், வீரர்வழியில், அறிஞர் வழியில், வன்னியர் வழியில் வந்த யாமோ ஆண்மைகுன்றி, அறிவிழந்து, பெருமை குறைந்து இந்நாளில் வாட்டமுற்று நிற்கின்றோம் என்ற உணர்ச்சி உங்கள் உள்ளத்தைவிட்டு நீங்காதிருக்குமாயின் நாமும் உய்வோம் நம் தமிழ்நாடும் உயர்வெய்தும்.
...ஒரு சாரார் வகுப்புணர்ச்சி கூடாது எனவும், அது தேச விடுதலைக்குத் தீமை விளைக்கும் எனவும் கூறுகின்றனர். இன்னோரது கூற்றை ஆராய்தலும் அவசியமாகும். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று தமிழ்மறை முழங்கும் நம் தமிழ்நாட்டிலே எங்கனமோ பல வகுப்புகள் தோன்றி நிலை பெற்றுவிட்டன. அங்கனம் தோன்றியவை நன்மைக்கோ தீமைக்கோ என்பதை நீங்களே அராய்ந்து முடிவு காணவேண்டியது தான். பல வகுப்பினருள்ள ஒரு நாட்டிலே ஒவ்வொரு வகுப்பினரும் தம் முன்னேற்றத்திற்காக உழைத்து உயர்நிலையை அடைந்தால்தான், நாடும் பொதுவில் முன்னேற்றமடையும் என்பது உறுதியாகும்.
எல்லா உறுப்புகளும் வலிமை எய்தின் அன்றோ உடலும் வலிமையுறும்? உறுப்புகள் சில உரம்பெற்றும் சில உரம் குன்றியிமிருப்பின் உடல் நல்லுடலென்று கருதப்படுமா? அது போலவே நாட்டிலுள்ள எல்லா வகுப்பு மக்களும் நன்னிலை அடையினன்றோ நாடும் சிறப்புற்று விளங்கும்?
எல்லா வகுப்பினரும் முன்னேற்றம் அடைவதற்குரிய ஒரே வழி வகுப்புவாதச் செயலை அரசாங்கம் மேற்கொண்டு நடப்பது தான்.
அன்றியும், நம் நாட்டில் பல்வேறு வகுப்புகள் இருக்கும் வரையில் வகுப்புணார்ச்சியும் நிலைத்திருக்குமென்பது திண்ணம். அத்தகைய வகுப்புணர்ச்சியை அழித்ததற்கு வகுப்புவாதச் செயலை மேற்கொள்வதுதான் நேரிய முறையாகும். இரும்பை இரும்பினால் வெட்டுவது போலவும், வைரத்தை வைரத்தால் அறுப்பது போலவும் வகுப்புணர்ச்சியை வகுப்புவாதச் செயலால் ஒழித்துவிடலாம் என்பது ஒருதலை.
இந்நாளிலும் ஆதிதிராவிடர்களுக்கு அரசாங்கத்தினர் தனி உரிமைகளை வழங்கியிருப்பது வகுப்புவாதச் செயலன்றோ? அத்தகையை செயலை அன்னோர் மேற்கொண்டது பிற்போக்கான நிலையிலுள்ள அவ்வகுப்பினரை மேல்நிலைக்கு கொணர்வதற்கே என்பதில் கருத்து வேறுபாடு நிகழ்வதற்கு இடமில்லை. எனவே, தாழ்ந்த நிலையிலுள்ள மக்களை உயர்ந்துவதற்கு வகுப்புவாதச் செயல் இன்றியமையாதது என்பது நன்கு புலப்படவில்லையா?
ஆகவே, நாடு நலமுற வேண்டில், சமத்துவ உணர்ச்சி யாண்டும் பரவ வேண்டில், நாட்டிலுள்ள பல்வேறு வகுப்பினரும் தம் எளிமையும் தாழ்வும் நீங்கி நன்னிலையுற வேண்டுமன்றோ? அதலால், ஒவ்வொரு வகுப்பினரும் தம் தம் வகுப்பு முன்னேற்றத்திற்குரிய ஆக்க வேலைகளைச் செய்யத் தொடங்குவது நாட்டின் பொது நலத்திற்கும் விடுதலைக்கும் ஒரு சிறிதும் தீமை விளைக்காது என்பதை அன்பர்கள் உணர வேண்டும்.
அச்செயலைச் சில ஆண்டுகள் கைக்கொண்டொழிகின் மக்களுள் சமத்துவ உணர்ச்சி பரவிவருவதை விரைவிற் காணலாம். அன்றியும், ஒருவர் மற்றொருவர் தாழ்ந்தவராகக் கருதும் தவறான எண்ணம் ஒழிந்துவிடும். இதன் பயனாக வகுப்பும், வகுப்புணர்ச்சியும் மறைந்துவிடும் என்பது திண்ணம். அந்நாளில்தான் நம்நாடு ஆற்றல் வாய்ந்த நன்னாடாக விளங்கும்."
இவ்வாறு, 27.02.1939 'வன்னியகுல சத்திரிய மாநாட்டில்' பேசினார் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்.
"யார் இந்த சதாசிவ பண்டாரத்தார்?"
---------------
தமிழ்நாட்டின் வரலாற்றை ஆராய்ந்து பதிவு செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் ஆகும். கல்கியின் பொன்னியின் செல்வன், சாண்டில்யணின் கடல்புறா போன்ற பல வரலாற்று புதினங்களுக்கு ஆதாரமாக இருந்தது இவரது ஆய்வுகள் தான். சோழப்பேரரசின் வரலாற்றை முழுவதுமாக ஆதாரப்பூர்வமாக எழுதியவர் இவர்தான்.
தி.வை.சதாசிவ பண்டாரத்தார் கும்பகோணம் அருகில் திருப்புறம்பியத்தில் பிறந்தார் (1892). பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்தார். உயர் கல்வியை கும்பகோணத்தில் பயின்றார். வாணதுறை உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1942-ல் அண்ணாமலை செட்டியாரின் அழைப்பை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
முதல்குலோத்துங்க சோழன், பாண்டியர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, திருப்புறம்பயம் தல வரலாறு, செம்பியன் மாதேவி தலவரலாறு, காவிரிப்பூம்பட்டினம், திருக்கோவலூர் புராணம், தொல்காப்பியப் பாயிரவுரை ஆகிய பல நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய பிற்கால சோழர் சரித்திரம் மிக முக்கியமான நூலாகும். தமிழக பல்கலைக்கழகங்களின் இவரது நூல்களே வரலாற்று பாடங்களாக இருந்தன.
பண்டாரத்தார் நீதிக்கட்சியின் கருத்துக்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தந்தைப் பெரியார் அவர்கள் கும்பகோணத்திற்கும் சிதம்பரத்துக்கும் வரும் போதுயெல்லாம் சந்திப்பார். அதே நேரத்தில் சைவ சமய ஈடுபாடு உடையவராகவும் பண்டாரத்தார் விளங்கினார். தமது பிறந்த ஊரான திருப்புறம்பயத்திலுள்ள கோயிலில் சைவ சமய நால்வருக்கும் ஆண்டு தோறும் குருபூசை நடத்தி வந்துள்ளார்.
தமிழோடு தொடர்புடைய பல நிகழ்வுகளில் பண்டாரத்தார் கலந்துகொண்டுள்ளார். தமிழகப் புலவர் குழு முதன்முதலில் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் கூடியபொழுது அதன் முதல் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தஞ்சாவூரில் இராசராசன் விழாவை முதன் முதலாக ஆரம்பித்தபொழுது முதற் சொற்பொழிவு நிகழ்த்தியவர் பண்டாரத்தார் ஆகும்.
வாழ்நாள் முழுவதும் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு வந்தவரான தி.வை.சதாசிவ பண்டாரத்தார், 1960-ம் ஆண்டு ஜனவரி 2 ஆம் நாள் தமது 68-வது வயதில் மறைந்தார்.
தமிழர் வரலாற்றுக்கும் தமிழ் மொழிக்கும் பாடுபட்ட சதாசிவ பண்டாரத்தர் நினைவை போற்ற வேண்டும். தமிழக அரசு வரலாற்று வளர்ச்சிக்காக பண்டாரத்தார் பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். திருப்புறம்பியத்தில் அவர் வசித்த வீட்டினை நினைவு இல்லமாக மாற்றவேண்டும்.
குறிப்பு: தி.வை.சதாசிவ பண்டாரத்தார் அவர்களது பேரன் சதாசிவம், சிதம்பரத்தில் எனது அண்ணனுடைய வகுப்புத் தோழராக இருந்தார். தனது தாத்தா எழுதிய பல வரலாற்று குறிப்புகள் பதிப்பிக்கப்படாமல் தனது வீட்டில் இருப்பதாக சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கூறினார். அந்த குறிப்புகள் என்ன ஆயின என்பது தெரியவில்லை.
Comments
Post a Comment