"வடபழனி முருகன் கோவில்: வரலாறு திருத்தப்படுமா?"
வடபழனி முருகன் கோவிலில் ஜனவரி 23-ம் தேதி குடமுழக்கு நடைபெறுகிறது. இக்கோவிலின் வரலாற்றுப் பதிவில் உள்ள தவறு இந்த முறையாவது திருத்தப்பட வேண்டும்.
வடபழனி கோவிலை நிறுவியவர் அண்ணாசாமி நாயகர் எனும் முருகபக்தர் ஆகும் (வன்னியர்). ஆனால், இக்கோவில் கல்வெட்டில் அதனை அண்ணாசாமி தம்பிரான் (செங்குந்தர்) என்று மாற்றி வைத்துள்ளனர். 2014 ஆம் ஆண்டிலேயே இந்தத் தவறை சுட்டுக்காட்டிய பின்னரும், இன்னமும் அதனை மாற்றாமல் வைத்துள்ளனர். இந்த தவறு குடமுழக்கில் திருத்தப்பட வேண்டும்.
"வடபழனி முருகன் கோவில் வரலாற்று"
புலியூர்கோட்டம் எனப்படுகிற சென்னை வடபழனியில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் அண்ணாசாமி நாயகர். தனது வயிற்றுவலித் தீரவேண்டும் என்று முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடத் தொடங்கினார். நேர்த்திக் கடனாக திருத்தணி கோவிலில் நாக்கை அறுத்துக் கொண்டார். (எனினும் அவருக்கு தொடர்ந்து பேச்சு வந்ததாகவும் வயிற்றுவலி தீர்ந்ததாகவும் தலபுராணம் கூறுகிறது).
பழனிமலை முருகன் கோவிலுக்கு நடந்தே சென்ற அண்ணாசாமி நாயக்கர், அங்கு ஒரு முருகன் படத்தை வாங்கி, அதனை தலையில் சுமந்து புலியூர்க் கோட்டம் வந்தார். அங்கு சிறு குடிசை அமைத்து முருகன் படத்தை வைத்து வழிபட்டார். அங்கு வந்தவர்களுக்கு குறிசொன்னார். அதனால் அந்த இடம் குறிமேடை ஆனது. (அந்த முருகன் படம் இப்போதும் வடபழனி ஆலயத்தின் தென்கிழக்கு மண்டபத்தில் உள்ளது)
பின்னர் இரத்தினசாமி செட்டியார் என்பவர் அண்ணாசாமி நாயகருக்கு அறிமுகமானார். அவர் அண்ணாசாமி நாயகரின் தொண்டராக ஆனார். இருவரும் சேர்ந்து முருகப்பெருமானுக்கு சிறு கோயில் ஒன்றை கட்டினார்கள். இரத்தினசாமி செட்டியார் தனது தொண்டராக பாக்யலிங்க தம்பிரான் என்பவரை தேர்வு செய்தார்.
இவ்வாறாக, வடபழனி முருகன் கோவிலில் அண்ணாசாமி நாயகர் முதல் சித்தராகவும், இரத்தினசாமி செட்டியார் இரண்டாம் சித்தராகவும், பாக்கியலிங்க தம்பிரான் (செங்குந்தர்) மூன்றம் சித்தராகவும் கருதப்படுகிறார்கள்.
"எங்கே இருக்கிறது வரலாற்று மறைப்பு?"
மேற்கண்ட வரலாற்றின் படி தெரியவரும் செய்தி, வடபழனி கோவிலை உருவாக்கியவர் அண்ணாசாமி நாயகர். அவர் ஒரு வன்னியர் என்பதாகும்.
ஆனால், வரலாற்று அடையாளங்களில் இருந்து வன்னியர்களை அப்புறப்படுத்த வேண்டும். வன்னியர்களது அடையாளங்களை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்பது தமிழ்நாட்டில் வழிவழியாக வரும் குணமாக இருப்பதால் - வடபழனி ஆலயத்திலும் அதனை அரங்கேற்றினார்கள்.
வடபழனி முருகன் கோவிலுக்கு வடமேற்கே, நெற்குன்றம் சாலையில் வடபழனி கோவிலை உருவாக்கிய சித்தர்கள் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தை நிர்மானித்து இதற்கான மண்டபத்தை 1997 இல் கட்டினார்கள். அதற்கான கல்வெட்டில், கோவிலை உருவாக்கிய சித்தர்களின் சாதி அடையாளத்தை மாற்றிவிட்டார்கள். அதாவது:
முதலாம் சித்தர்: அண்ணாசாமி நாயகர்
இரண்டாம் சித்தர்: இரத்தினசாமி செட்டியார்
மூன்றாம் சித்தர்: பாக்கியலிங்க தம்பிரான்
- என்பதை:
முதலாம் சித்தர்: அண்ணாசாமி தம்பிரான்
இரண்டாம் சித்தர்: இரத்தினசாமி தம்பிரான்
மூன்றாம் சித்தர்: பாக்கியலிங்க தம்பிரான்
- என்று மாற்றிவிட்டனர்.
அதாவது, வன்னியர், செட்டியார் என்கிற சாதி அடையாளம் மறைக்கப்பட்டது. இந்த மூன்று சித்தர்களும் ஒரே தம்பிரான் குடும்பத்தை (செங்குந்தர்) சேர்ந்தவர்கள் என்பது போன்ற கட்டுக்கதையைக் கட்டிவிட்டார்கள்.
இப்போது வடபழனி முருகன் கோவிலை உருவாக்கியவர் 'அண்ணாசாமி தம்பிரான்' (செங்குந்தர்) என்கிற கட்டுக்கதைதான் வலம் வருகிறது (எடுத்துக்காட்டு: தினமலர் கோவில்கள் பக்கம்).
2014 ஆம் ஆண்டிலேயே இந்தத் தவறை நாம் சுட்டுக்காட்டிய பின்னர், வடபழனி கோவிலை உருவாக்கிய சித்தர்கள் ஆலயக் கல்வெட்டில், தம்பிரான் என்பதன் மீது வெறும் வண்ணம் பூசி மறைத்துள்ளனர்.
"என்ன செய்ய வேண்டும்?"
1. சித்தர்கள் ஆலய கல்வெட்டினை புதிதாக மாற்றி, அண்ணாசாமி நாயகர், இரத்தினசாமி செட்டியார், பாக்கியலிங்க தம்பிரான் (செங்குந்தர்) என்கிற பெயர்களை இடம்பெற செய்ய வேண்டும்.
2. வடபழனி கோவிலை நிர்மானித்தவர் அண்ணாசாமி நாயகர் என்பதை இக்கோவிலின் வரலாற்றில் பிரதானமாக இடம்பெற செய்ய வேண்டும்.
3. அண்ணாசாமி நாயகர் குடும்பத்தினருக்கு குடமுழக்கு விழாவில் உரிய முன்னுரிமை தரவேண்டும்.
4. வன்னியர், செட்டியார், செங்குந்தர் என தமிழ்ப்பேசும் சமூகத்தவர்களால் உருவான, தமிழ்க் கடவுளான முருகனின் வடபழனி கோவில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்.
குறிப்பு: வடபழனி கோவில் உருவாக்கத்தில் செங்குந்தரான பாக்கியலிங்க தம்பிரான் பங்களிப்பை நாம் மறுக்கவில்லை. ஆனால், வன்னியர், செட்டியார் பிரிவினரின் பங்களிப்பு மறைக்கப்படக் கூடாது.
Comments
Post a Comment