Political - எங்கே போகிறது நமது அரசியல் - எதை நோக்கி நமது பயணம் !

                                        எங்கே போகிறது நமது அரசியல் 

                                            நாம் பாதை என்ன! 




அறிவார்ந்தவர்களும், தன்னலம் துறந்தவர்களும்,நாட்டு நலனில் நாட்ட முள்ளவர்களும்,மாசற்ற தொண்டுமனம் கொண்டர்களும் மட்டுமே ஒரு காலகட்டத்தில் அரசியல் உலகில் அடியெடுத்து வைத்தனர்.'தத்துவ ஞானிகளே தலைமையேற்று ஆளவேண்டும்? என்று அறிவுறுத்தியவர் கிரேக்க அறிஞர் பிளேட்டோ. தனக்கென்று தனியாக ஒரு குடும்பம் இல்லாத மனிதர்களே தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்பது அவருடைய அழுத்தமான அபிப்ராயம்.

மனைவி, மக்கள்,குடும்பம் என்று அன்றாடம் பாசத்தில் அலைக்கழிக்கப்படுபவர்கள் விரைவில் ஆசை வலையில் விழுந்து, தன் நிலை தாழ்ந்து, தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்தில் இருந்து வெகுதூரம் விலகி,கால நடையில் ஊழலின் உற்பத்தியாளர்களாக உருப்பேற்றுவிடுவார்கள் என்ற நியாயமான அச்சத்தினால்தான், நெருங்கிய உறவுகளை நெஞ்சத்தில் வளர்த்துக் கொள்ளாதவர்கள் மட்டுமே 'வையகத் தலைமை ' கொள்ள வேண்டும் என்று இயேசு பிறப்பதற்கு முன்பே விதியோன்று செய்தார் பிளேட்டோ.

வாயிலே அழுக்கென்று
நீரெடுத்துக் கொப்பளித்தேன்.
கொப்பளிக்கக் கொப்பளிக்க
வாயும் ஓயாமல் அழுக்கும் போகாமல்
உற்றுப் பார்க்கிறேன்.....
நீரே அழுக்கு!

தத்துவம் என்பது உண்மையின் உருவம். உண்மையைத் தேடும் யாரும் பொய்யின் நிழலில் இளைப்பாற விரும்ப மாட்டார்கள். அதனால்தான், அதிகார நாற்காலியில் தத்துவஞானிகள் அமரவேண்டும் என்று ஆசைப்பட்டார் அந்த ஆதிச் சிந்தனையாளர். மக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் வல்லமை அன்று முதல் இன்று வரை அரசியலுக்கே உண்டு. அரசியல் சார்ந்த ஆட்சிக் கலையைத் ' தலைமை அறிவியல்' (Master science) என்று அரிஸ்டாட்டில் வர்ணித்ததில் ஆழ்ந்த அர்த்தம் உண்டு.ஆனால் இன்று அனைத்தும் தலைகீழாக மாறித் தரம் தாழ்ந்துவிட்டன.  அயோக்கியர்களின் கடைசி புகலிடமாக நேற்றிருந்த அரசியல் உலகம்,இன்று சகல விதமான அயோக்கியர்களுக்கும் முதல் சரணாலயமாகிவிட்டது.





சந்திரமதி இல்லாமல் அரிச்சந்திரன் நாடகம் இல்லை. கள்ள மனிதர்கள் இல்லாமல் இன்று எந்த அரசியல் கட்சியும் இல்லை.

சமூகத்தில் படித்துவிட்டு சகல அழுக்குகளையும் அகற்றுவதற்காகவே உருவாக்கப்பட்ட அரசியலமைப்பே இன்று எளிதில் சுத்தப்படுத்த முடியாதபடி அடர்த்தியாக அழுக்கேறிக் கிடக்கிறது.துர்நாற்றம்  வீசும் இந்த அரசியல் குட்டையைத் தூர்வார யாரும் இங்கே தயாராக இல்லை. அடித்தட்டு மக்களுக்கு இந்த நாற்றம் பழகிவிட்டது. மேல்தட்டு வர்க்கம் மூக்கை மூடியபடி முகத்தைத் திருப்பிக்கொண்டது. யார்தான் இந்த நாட்டு மக்களின் நிலை குறித்து யோசிப்பது?  புழுத்துக்கிடக்கும் பொதுவாழ்வைப் புனிதமாக யாராவது சிலர் முன்வந்து சிலுவை சுமக்கத்தான் வேண்டும்.




ஒரேயோரு இயேசு புறப்பட்டால் அதிகாரபீடம் எளிதாக அவரை சிலுவையில் அறைந்துவிடும். ஆயிரக்கணக்கில் சிலுவை சுமக்க வாக்காளர்கள் முன்வந்தால்  தவறு செய்பவர்கள் தலையில் சிரமமின்றி முள்மகுடம் சூட்டிவிடலாம். ' எது நடந்தால் நமக்கென்ன? என்றா பகத்சிங்கின் பரிவாரம் பார்த்துக் கொண்டிருந்தது? எரிகிற வீட்டில் எடுத்த வரை ஆதாயம் என்ற நாக்கிலா காந்தியப்படை அன்று அகிம்சைப் போர் நடத்தியது?  சமுகப் பொறுப்பு உணர்வு உள்ளவர்கள் இனியும் மெளனப் பார்வையாளர்களாக இருந்தலாகாது.

அடிமை இந்தியாவில்கூட ஆயுதம் தேவைப்பட்டிருக்கலாம். சுதந்திர இந்தியாவில் அறவழி மூலம் அறப்போர் நடத்தியே ஆயிரம் மாற்றங்களை நாம் நினைத்தால் அரங்கேற்ற முடியும்.முதல் மாற்றம் நம் விதியெழுதும் அரசியல் தளத்தில் நிகழ்வதற்கு வழிவகுக்க வேண்டும். தீமையின் வெற்றிக்குத் தேவையானது நல்லவர்கள் எதுவும் செய்யாதிருப்பதே ' என்ற ஆங்கில அறிஞர் எட்மண்ட் பர்க் வாசகத்தை நாம் நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

இதை திரு தமிழருவி மணியன் அரசியல் மற்றும் தமிழக அரசியல் அதை பின் தொடரும் இந்திய அரசியலை சுட்டிக்காட்டு அமைத்திருக்கிறார் - (பாகம் - -1 )தொடரும்........


Comments