இந்த புத்திரனால் நமது குலம் அழியப் போகிறது என்பதன் அறிகுறிதான்...
பாண்டு மகாரானனின் மனைவியாகிய குந்திதேவி யுதிஷ்டீரனைக் கருவுற்றிருப்பதற்கு முன்பாகவே திருதராஷ்டிரனின் மனைவி காந்தாரி கருவுற்றிருந்தால் ஆனால் காந்தாரியோ இரண்டு வருடங்களாகியும் குழந்தை பிறக்காதது கண்டு ஏமாற்றம் கோபமும் அடைந்தாள்.
அதே நேரத்தில் தனக்குப் பின்னால் கருவுற்ற குந்தி யுதிஷ்டிரனைப் பெற்றெடுத்த செய்தி அறிந்து ஆத்திரமடைந்து தனது வயிற்றில் அம்மிக்கல்லால் ஓங்கி குத்திக் கொண்டாள். அதன் காரணமாக ஒரு பெரிய மாமிசப் பிண்டம் வெளியேறியது. அதனை அருவருப்புடன் அப்புறப்படுத்த காந்தாரி முனைந்தபோது நூறு மக்கள் பிறப்பார்கள் என்று ஆசீர்வதித்திருந்த வியாச பகவான் நேரில் தோன்றினார்.
"காந்தாரி, உன்னுடைய அவசரத்தாலும் பொறாமையாலும் காரித்தைக் கெடுத்துக் கொள்ள முனைந்தாயே. எனது வாக்கு பொய்யாகாது. இந்த பிண்டத்தை குளிர்ந்த நீரில் கழுவி நூறு நெய்க்குடங்களில் பகிர்ந்து இட்டுவை. உரிய காலம் வந்ததும் புதல்வர்கள் பிறப்பார்கள் "என்று கூறி மறைந்தார்.
பிண்டத்தை காந்தாரி எடுத்த கழுவும் போது அது நூறு துண்டங்களாகப் பிரிந்தது. அவற்றை நூறு குடங்களில் இட்டாள். அப்போது சிதறிய சிறிய பிசிறுகளையும் ஒன்று திரட்டி நூற்றி ஓராவது குடத்தில் இட்டுப் பாதுகாத்தாள்.
உரிய காலம் வந்ததும் குடம் தகர்ந்து கோழி முட்டையின் கூடுகளை உடைத்து குஞ்சு வெளிவருவது போல ஒவ்வொரு நாளும் ஒன்றாக நூற்றியோர் குழந்தைகளும் வெளியேறினர்.
அதில் முதலாவதாகப் பிறந்தவன்தான் துரியோதனன். துரியோதனன் பிறந்தபோது கழுதை ஓலமிடுவதுபோல சத்தம் கேட்டது.இன்னும் தீய சகுனங்கள் தென்பட்டது இதனை கேட்ட திருதராஷ்டிரன் மனம் வருந்தி பீஷ்மரிடமும் விதுரனிடமும் பலன் கேட்டான்.
"அண்ணா,இந்த புத்திரனால் நமது குலம் அழியப் போகிறது என்பதன் அறிகுறிதான் இது.நூறு மக்களைப்பெற்ற, தாங்கள் இந்த முதல் மகனை இப்போது இழந்துவிட்டால் மேன்மையுறலாம் ஒரு குலம் தப்பிப்பதற்கு ஒருவனைத் தியாகம் செய்வது நல்லது. " என்று விதுரன் யோசனை தெரிவித்தபோது திருதராஷ்டிரன் புத்திர பாசத்தால் அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை.
நூறு ஆண் குழந்தைகளும் பிறந்த பின்பு கடைசியாக உதிரிச் சேர்க்கையால் பிறந்த பெண் குழந்தையின் பெயர் துச்சலையாகும்.
Comments
Post a Comment